» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அட்சய பாத்திரத்தை பிடிங்கிக்கொண்டு பிச்சை பாத்திரம் வழங்குவதா? கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 4:17:11 PM (IST)
மாநிலங்களின் கல்வி உரிமையை பறிப்பது, மணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பிடிங்கிக்கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது என்று மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசினார்.
மக்களவையில் தமிழில் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி: ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பாஜக அரசு ஒதுக்கவில்லை. கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஒன்றிய அரசு குறைத்து கொண்டே வருகிறது. கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில அரசுகள்தான். மாநில அரசுகள்தான் கல்விக்காக 50% நிதியை வழங்குகின்றன. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மாநிலத்துக்கு நிதி தருவோம் என கூற ஒன்றிய அரசுக்கு அதிகாரம் தந்தது யார்?
மணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பிடிங்கிக்கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது. தமிழ்நாட்டிற்கு கல்விக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை. குஜராத் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகள் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது மாநில உரிமைகளை பறிக்கிறார். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் தான்.
தமிழ்நாட்டில் தற்போது காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார். மதிய உணவு திட்ட நிதியை ஒன்றிய அரசு குறைத்தது ஏன்? குலக் கல்வி முறையை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அரசின் திட்டங்கள் அமைந்துள்ளது. இந்தியுடன் சேர்த்து சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது ஒன்றிய அரசு. குலக் கல்வி முறையை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
மேலும், சிறிய ஊர்களிலும் கல்லூரிகளை கொண்டு வந்தவர்தான் கலைஞர். நீட் தேர்வின் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை ஒன்றிய அரசு சிதைக்கிறது. மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு என்பது தேவையில்லை. நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலம் பயிற்சி மையங்கள் மட்டுமே பயன் பெறுகின்றன. நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவ கனவுகளை ஒன்றிய அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது.
சாதி என்ற கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்று காலம் காலமாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். சாதியை வலியுறுத்தும் பிரதமர் தலைமையில் இயற்றப்படும் கல்வி திட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று கனிமொழி எம்.பி. திட்டவட்டமாக கூறினார். ஒருவரின் சாதி என்ன என்று தெரிந்து கொள்வதில் என்ன பெருமை உள்ளது. சாதியற்றவர்களாக வாழ்வதில்தான் பெருமை உள்ளது என்று அவர் கூறினார்.