» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோயிலில் திருக்கல்யாண திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
புதன் 30, அக்டோபர் 2024 11:08:18 AM (IST)
தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, கடந்த 19ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவில் தினமும் மாலை அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். 9ம் திருநாளான கடந்த 27ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தேரோட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அருள்மிகு பாகம்பிரியாள் - சங்கர ராமேஸ்வா் மாலை மாற்றும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி - அம்பாளை தரிசித்தனா்.
பூஜைகளை பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், குரு, சண்முகம் ஆகியோர் நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்செல்வி, அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, ஆறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம், பி.சாந்தி, விஎம் ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.