» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வல்லநாடு ஆற்றுப்பாலத்தில் மீண்டும் சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்!
புதன் 30, அக்டோபர் 2024 5:49:28 PM (IST)
வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் சேதம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரை நான்கு வழிச்சாலை திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நான்கு வழிச்சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென்றால் தூத்துக்குடியில் உள்ள துறைமுகங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், பெரிய கம்பெனிகளுக்கு செல்லும் வாகனங்கள், விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக தான் சென்று வருகின்றன.
தூத்துக்குடி-நெல்லை நான்கு வழிச்சாலையில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மிக பிரமாண்டமான பாலம் ஒன்று கட்டப்பட்டது. ஆரம்பம் முதலே பாலம் முறையாக கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், பாலத்தில் பல முறை விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்து பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது. சமீபத்தில் ரூ.13கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடந்து, பின்னர் போக்குவரத்து தொடங்கியது.
இந்நிலையில், பாலத்தில் இன்று மீண்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சேதமடைந்த பகுதியை சுற்றிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், சரக்குகளை வாகனங்களில் ஏற்றி செல்பவர்களும் ஒருவிதமான அச்சத்துடன் சென்று வருகின்றனர். ரூ.13கோடி கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, வல்லநாடு பாலத்தை முழுமையாக சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.