» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சேவைக் குறைபாடு: புதிய வாகனம், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 3:58:33 PM (IST)
சேவைக் குறைபாடு காரணமாக நான்கு சக்கர விற்பனையாளர், புதிய வாகனம் மற்றும் 60,000 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தைச் சார்ந்த மணி பாலகுமார் என்பவர் திருநெல்வேலி நான்கு வழிச் சாலையிலுள்ள நான்கு சக்கர வாகன விற்பனையாளரிடம் ஒரு கார் வாங்கியுள்ளார். அதை கார் விற்பனையாளரிடமே சர்வீஸ்கள் செய்துள்ளார். சர்வீஸ் செய்த பிறகு இஞ்சின் ஆயில் அளவைக் காட்டும் பகுதியில் எச்சரிக்கை விளக்கு எரிந்துள்ளது. இது குறித்து கார் விற்பனையாளரிடம் கேட்டதற்கு அது தானாகவே அணைந்து விடும் எனக் கூறியுள்ளனர். ஆனால் திடீரென இந்தக் காரின் இஞ்சின் முழுமையாக ஓடாமல் நின்று விட்டது. கார் வாங்கிய வருடத்திற்குள்ளாகவே முற்றிலும் பழுதானதால் புதிய கார் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கார் விற்பனையாளர் அதற்கு சம்மதிக்கவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணி பாலகுமார் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பழுதான நான்கு சக்கர வாகனத்திற்கு பதில் புதிய நான்கு சக்கர வாகனம் அல்லது காரின் விலையான 12 இலட்சம் மற்றும்; சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 50,000 வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆகியவற்றை இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.