» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்ச் செம்மல் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் தகவல்!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 11:12:26 AM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ் அறிஞர்களிடமிருந்து தமிழ்ச் செம்மல் விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தாெடர்டபாக மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் "தமிழ்ச்செம்மல்" என்னும் பெயரில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் இவ்விருது வழங்கப்பெறுகிறது.
இவ்விருதுக்கு தெரிவு செய்யப்படுவோர் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் மட்டும்) தகுதியுரையும் வழங்கப்பெறும். இவ்வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான "தமிழ்ச்செம்மல்" விண்ணப்பப்படிவங்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
"தமிழ் செம்மல்" விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள் விருதுக்கான விண்ணப்பத்தினை இருபடிகளில் உரியவாறு நிறைவு செய்து தன் விவரக்குறிப்பு, நூல்கள், கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்களை (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் இருபடிகள் இணைக்கப்பட வேண்டும்).
தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்குத் தகுதியாக குறிப்பிடத்தக்கப் பணிகள் தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக் கடிதம், மாவட்டத்தில் செயல்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம், ஆதார் அட்டை ஒளிப்படி, குடும்ப அட்டை ஒளிப்படி மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்களுடன் ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கானச் சான்றுகளையும் இணைத்து உரிய விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து 10.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஊரக வளர்ச்சி முகமை பழைய கட்டிடத்தில் முதல் தளத்தில் இயங்கி வரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்பி வைக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.