» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தழிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்!
புதன் 31, ஜூலை 2024 12:28:57 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் தழிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (30.07.2024), சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன் திட்டம்” வருகின்ற ஆகஸ்ட் மாதம் செயல்படுத்தப்படவுள்ளதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், கல்லூரி தொடர்பு அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான முன்னேற்பாட்டுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழிக்கல்வியிலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழிக்கல்வியிலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அவர்களின் உயர்கல்வியைத் தொடரும் போது மாதந்தோறும் 1000 ரூபாய் நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் 2024-2025 கல்வியாண்டு முதல், தமிழகத்தில் அரசு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று உயர்கல்வியில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் வகையில் இத்திட்டம் துவங்கப்படவுள்ளது. 2023-2024 ஆம் கல்வியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்ற 2138 மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
எனவே, இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய அனைத்து மாணவர்களும் கல்லூரி தொடர்பு அலுவலர்கள் மூலம் விண்ணப்பித்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக புதிய வங்கிக் கணக்கு தொடங்கிடவும், ஆதார் எண் இணைப்பதற்காகவும் கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் மாணவர்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், கல்லூரிகளின் முதல்வர்கள், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள், தூத்துக்குடி மாவட்ட சமூக நல விரிவாக்க அலுவலர்கள் மற்றும் மகளிர் நல அலுவலர்கள் அனைவரும் ‘தமிழ்ப் புதல்வன்” திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை கல்லூரி இணையதளத்தில்(UMIS) பதிவேற்றம் செய்து, மாணவர்கள் இத்திட்டத்தில் தொடர்ந்து பயனடைவதை மாதந்தோறும் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விக்னேஷ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
V. TamilarasanJul 31, 2024 - 02:39:32 PM | Posted IP 162.1*****