» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் : 2பேர் கைது!
திங்கள் 22, ஜூலை 2024 10:24:07 AM (IST)
கல்லாமொழி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி கிராம கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து தூத்துக்குடி 'கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதய ராஜ்குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கல்லாமொழி கடற்கரை வழியாக இன்று அதிகாலை 2 மணிக்கு சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 106 மூட்டைகளில் பீடிஇலை இருந்தது தெரியவந்தது. அவற்றை இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் ஆகும்.
இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் ஆரக்கோட்டை காரைக்குடியைச் சேர்ந்த அருள் விஜயகாந்த் (35) மற்றும் நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மா சாலையைச் சேர்ந்த பாண்டியன் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டனர். மேலும் பைபர் படகையும், வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.