» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருட்கள் விற்பனையாளர் - கொள்முதலாளர்கள் சந்திப்பு!

வியாழன் 18, ஜூலை 2024 5:22:11 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருட்கள் விற்பனையாளர் மற்றும் கொள்முதல் செய்வோர் சந்திப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு இராமையா மஹாலில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட ஏதுவாக நடைபெற்ற விற்பனையாளர் மற்றும் கொள்முதல் செய்வோர் சந்திப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை இடைத்தரகர்களைக் கொண்டு மொத்த விற்பனை செய்யக்கூடிய சூழ்நிலை உள்ளது. 

இதனால் கிடைக்கக்கூடிய வருவாயில் இடைத்தரகர்களுக்கு ஒரு பகுதி செலவிட வேண்டியுள்ளது. இவர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பல்வேறு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த நிலையில் தற்போது சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக மொத்தக் கொள்முதலாளர்களிடம் விற்பனை செய்ய ஏதுவாக வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மொத்தக் கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பு நடத்திட திட்டமிடப்பட்டது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மொத்தக் கொள்முதலாளர்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துதல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மத்தியில் தங்களது உற்பத்தி பொருட்களுக்கு ஒரு விற்பனை தளம் அமைந்துள்ளது என்ற நம்பிக்கையை உருவாக்குதல், மொத்தக் கொள்முதலாளர்களுக்கு நேரடியாக மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தியாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துதல், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துதல், இடைத்தரகர்கள் இன்றி உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்தல் ஆகியவையே மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மொத்தக் கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பு நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனையாளர் மற்றும் கொள்முதல் செய்வோர் சந்திப்பு முதற்கட்டமாக ஊராட்சி ஒன்றியம் வாரியாக நடத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட அளவில் விற்பனை மற்றும் கொள்முதல் செய்வோர் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பில் மகளிர் சுய உதவிக்குழு பொருட்களான வேளாண் விளைப்பொருட்கள், கருப்பட்டி, பனங்கற்கண்டு, கடலை மிட்டாய், மாவு வகைகள், ஊறுகாய் வகைகள், சத்துமாவு, மசாலாப் பொடி வகைகள், முருங்கை பொடி, திண்பண்டங்கள், பேக்கிரி வகைகள் (ஜாம்), பனை ஓலைப் பொருட்கள், செயற்கை நகைகள், மென்பொம்மைகள், பொக்கே, மணிபாண்டப் பொருட்கள், வயர்கூடை, பஞ்சகவ்ய விளக்கு, ஹேர் ஆயில் மற்றும் நாப்கின் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களை 20 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலமாக 20 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மொத்த கொள்முதலாளர்கள் கலந்துகொண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை பார்வையிட்டார். 

மேலும் 9 மொத்த கொள்முதலாளர்களுடன் புரிந்துணர்வு செய்யப்பட்டு கொள்முதல் ஆணைகள் வழங்கியுள்ளோம். மொத்த கொள்முதலாளர்கள் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து விற்று மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மல்லிகா, உதவி திட்ட அலுவலர் (வாழ்வாதாரம்) கிருஷ்ணகுமார் மற்றும் சுமார் 250க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory