» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும்: எம்பவர் இந்தியா கோரிக்கை!
திங்கள் 15, ஜூலை 2024 10:26:37 AM (IST)
ஆதிச்சநல்லூர் மற்றும் வெள்ளையத் தேவன் மணி மண்டபம் ஆகியவற்றிற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நடுவத்தின் கௌரவச் செயலாளர் ஆ.சங்கர் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழியிடம் நேரில் வழங்கிய மனு விவரம்: உலக நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் முதல் சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. இந்த இடம் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெரு மழையில் பாதிக்கப்பட்டது.
அப்போது இங்குள்ள பல பொருட்கள் வேறு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தற்பொழுது இந்த இடம் பராமரிப்பு இல்லாததால் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் பாதுகாப்பின்றி கிடைக்கின்றது. மேலும் பார்வையாளர்கள் குழிக்குள் விழுந்து விடும் சூழ்நிலையும் உள்ளது. எனவே ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி அதை நல்ல முறையில் பராமரிக்க ஆவன செய்ய வேண்டும்.
அதே போன்று நெல்லை – தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள வல்லநாட்டில் விடுதலை போராட்ட வீரர் வெள்ளையத் தேவனுக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்தில் பொது மக்கள் பயன் பெறும் வகையில் நூலகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு பணி புரிந்து வந்த நூலக பணியாளர் சமீபத்தில் விபத்தில் இறந்து விட்டார்.
அதன் பிறகு புதியதாக பணியாளர் யாரும் நியமிக்கப்படாததால் இந்த மணி மண்டபம் நாள் தோறும் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பது மிகுந்த வேதனை அளிக்கின்றது. எனவே காலியாக உள்ள நூலக பணியாளரை நியமிக்குமாறும் அங்கு குடிநீர், கழிவறைகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தர வேண்டுமென வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.