» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புகையிலை பொருள்கள் விற்ற சிறுவன் உட்பட 4பேர் கைது!
திங்கள் 15, ஜூலை 2024 7:57:36 AM (IST)
கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் தலைமையிலான போலீசார், கடலையூர் கிராமப் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார்களாம். கடலையூர் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி அருகே போலீசார் வாகன தணிக்கையின்போது அவ்வழியே சென்ற பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது பைக்கில் வைத்திருந்த சாக்கு பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், திருவேங்கடம் மாதா கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் கார்த்திக் (24), அவருடன் பைக்கில் வந்த இலுப்பையூரணியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் இருந்த சுமார் ரூ. 9 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும், ரொக்கம் ரூ.15 ஆயிரத்தையும், பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக், அவர் அளித்த தகவலின் பேரில் கோவில்பட்டி புது ரோடு பெருமாள் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக் (23), இலுப்பை யூரணி மேட்டு தெரு மறவர் காலனியை சேர்ந்த கந்தசாமி மகன் கார்த்திக் குமார் (27) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.