» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி : கீதாஜீவன் மகிழ்ச்சி!
ஞாயிறு 27, ஆகஸ்ட் 2023 9:00:22 PM (IST)
தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் எண்ணமாக செயல்படுவதாக கல்லூரியின் பொன் விழா கொண்டாட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி கடந்த 1973 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பொன்விழா கொண்டாட்டம் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், கல்லூரி ஊழியர்கள் ஆகியோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ஏபிசிவீ சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார்.
இந்தக் கல்லூரியில் பயின்ற சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கல்லூரியில் பயின்ற மறக்கமுடியாத நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லுரியில் 50வது பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் 1973ல் படித்த மாணவிகள் முதல் கடந்த முறை பயின்ற மாணவிகள் வரை வந்திருந்தனர்.
ஏபிசி வீரபாகு மிகச் சிரமங்களுக்கு இடையில் இந்த கல்லூரியை தொடங்கி தற்போது வளர்ச்சி பெற்ற கல்லூரியாக அரசு அதிகாரிகள், ஆன்றோர்கள், சான்றோர்களை உருவாக்கியுள்ளது. தூத்துக்குடி மண்ணைச் சார்ந்த மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் எண்ணமாக இந்த கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது அந்த கனவு மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இன்றும் சிறந்த கல்லூரிகளின் வரிசையில் இக்கல்லூரியும் உள்ளது. இக்கல்லூரியின் கல்விப் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவிகள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் மலரும் நினைவுகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறை, வளாகம் ஆகிய இடங்களுக்குச் சென்று குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் முன்னாள் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) க.சுப்புலட்சுமி வழிகாட்டுதலின்பேரில், கல்லூரி கணிதத்துறைத் தலைவர் கி.பழனி, உதவி பேராசிரியர் து.ராதா, வேதியல் துறைத்தலைவர் கோகிலா சுபத்ரா, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் நீதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.