» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை எம்பிக்கு தாமிரபரணி ஆர்வலர்கள் பாராட்டு!

சனி 29, மார்ச் 2025 8:31:38 PM (IST)

தாமிரபரணியை காப்பாற்ற தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருக்கு தாமிரபரணி ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனார். 

தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலக்க கூடாது, தாமிரபரணி மண்படங்கள் படித்துறைகளை சீரமைக்க வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குதொடர்ந்து இருந்தார். 

இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி நடத்தி வந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் தாமிரபரணியில் சாக்கடை கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்து அறநிலையத்துறை மூலமாக மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை பாதுகாக்கவேண்டும் என தீர்ப்பு விதித்தனர்.

இதற்கிடையில் இந்ததீர்ப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்க்க நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே தாமகவே முன்வந்து நீதியரசர்கள் மேல் விசாரணை விசாரித்தனர். இதற்கிடையில் மனுதாரர் முத்தாலங்குறிச்சி காமராசு கோர்ட் அவமதிப்பு வழக்கை மதுரை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்தார். இதனால் நீதியரசர்கள் ஜி. ஆர். சுவாமி நாதன், புகழேந்தி ஆகியோர் தாமிரபரணிக்கு கடந்த நவம்பர் 10 ந்தேதி நேரில் வந்து ஆய்வு செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் சாக்கடை கலப்பதை ஆய்வில் கண்டு பிடித்த நீதியரர்கள் அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதோடு மட்டுமல்லாமல் நிரந்தரமாக தாமிரபரணியில் சாக்கடை கலக்காமல் இருக்க என்ன தீர்வு என கேள்விகளை கேட்டனர். இந்த ஆய்வின் போது திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புருஸ் உடனிருந்தார். அவர் மத்திய அரசிடம் நிதி கேட்டு தருகிறேன் என நீதியரசர்கள் முன்னிலையில் ஒப்புதல் அளித்தார்.

அதன் பின் எம்.பி ராபர்ட் புருஸ் நவம்பர் 19 ந்தேதி தாமிரபரணி ஆர்வலர்களை அழைத்து அவர்களோடு ஆலோசனை நடத்தினார். அதன் பின் டிசம்பர் 1 ந்தேதி மீண்டும் ஆலோசனை நடத்தினார். அதன் பின் விரிவாக ஒரு மனுவை தயார் செய்தார்.

ராபர்ட் புரூஸ் இது தொடர்பாக மக்களவையில் கேள்வி கேட்டார். தாமிரபரணி ஆறு மாசுபட்டிருப்பதை மத்திய அரசு அறிந்து இருக்கிறதா?, அதனை சுத்தப்படுத்தி, புத்தாக்கம் செய்வதற்கு அரசிடம் ஏதேனும் பரிந்துரைகள் உள்ளதா?, நாட்டில் உள்ள முக்கிய நதிகளை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் என்ன? என்பன போன்ற கேள்விகளை அவர் கேட்டார்.

இதற்கு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.  2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின்படி, தாமிரபரணி ஆற்றில் பாப்பான்குளம் முதல் ஆறுமுகநேரி வரையிலான பகுதி மாசுபட்டதாக அடையாளம் காணப்பட்டது. ஆறுகளில் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரித்து கலக்கச்செய்வதை உறுதி செய்வது மாநிலங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு ஆகும்.
 
தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை தாமிரபரணியில் மாசுபாட்டை குறைப்பதற்கான திட்டங்களை அமைச்சகம் செயல்படுத்தியது. ஆனால் தற்போது எந்த திட்டமும் அமைச்சகத்தின் பரிசீலனையில் இல்லை. ஆறுகளை பராமரிப்பதற்காக மாநிலங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டம் , புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் மிஷன் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் இந்திய அரசு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது.

நாட்டில் கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகளின் மாசுபாட்டைக் குறைப்பதற்காக நீர்வளத்துறை அமைச்சகத்தால் நமாமி கங்கை என்ற மத்தியத் துறைத் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது. அதேநேரம் மத்திய அரசு வழங்கும் திட்டமான "தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டம்" மாநிலங்களின் முயற்சிகளுக்கு ஆதரவாக செயல்படுத்தப்படுகிறது. தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இதுவரை, 17 மாநிலங்களில் 57 ஆறுகளில் தூய்மைப்பணிக்கு ரூ.8931.49 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளது என்று பதிலளித்தனர். 

ஆனால் தாமிரபரணிக்கு இதுவரை நிதி எதுவும் வழங்கவில்லை என பதிலளித்தார். இதனால் எம்.பி மட்டுமல்லாமல் தமிழக மக்களே அதிர்ச்சி அடைந்தனர். தாமிரபரணிக்கு மத்திய அரசு எதுவும் திட்டம்தர வில்லை என்றவுடன் நிதி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார் ராபர்ட் புருஸ்.

இது தொடர்பாக தில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்து எம்.பி ராபர்ட் புரூஸ் மனு அளித்தார். அந்த மனுவில் தாமிரபரணி நதியை மறுசீரமைப்பு செய்தவற்கு முதல் கட்டமாக ரூ 570 கோடியை ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.

இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், நதியின் மறு சீரமைப்புக்கு நிதி ஒதுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால் அதற்கான வரைவு திட்டத்தினை தமிழக அரசு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதியரசர்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் மதுரை நீதி மன்றத்தில் நேரில் ஆஜரானார். அவர் நீதிபதியிடம் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தி பாதுகாக்கும்படி நாடாளுமன்றத்தில் பேசினேன். தாமிரபரணியை பாதுகாக்கக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா எனவும் கோரினேன். 

அப்போது மத்திய அரசு தரப்பில் 17 மாநிலங்களில் 57 நதிகளை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதற்காக சுமார் ரூபாய் 99 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க கோரி மாநில அரசு சார்பில் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் பட்சத்தில் உரிய நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே தாமிரபரணியை பாதுகாக்கும் நடவடிக்கைக்காக மத்திய அரசிடம் உரிய நிதி கேட்டு பெற மாநில அரசு திட்ட அறிக்கையை தயாரித்து அனுப்பும்படி உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். நீதியரசர்களும் மாநில அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்டார்.

இதற்கிடையில் கடந்த மார்ச்சு 21 மற்றும் 27 ந்தேதி பாராளுமன்றத்தில் எம்.பி. ராபர்ட் புருஸ் தாமிரபரணி நிலமை குறித்து பேசினார். அப்போது ஜக் சக்தி அமைச்சர் பட்டேல் தமிழக அரசு வரைவு திட்டம் கொடுத்தால் உடனே பணம் ஓதுக்கீடு செய்து தருவதாக கூறினார். இந்த தகவல் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனுதாரரின் வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி மூலம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (28.03.2025) அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் வசந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்தான் முதலில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும். 

தாமிரபரணி ஆற மாசுபடுவதைத் தடுப்பதற்கான விரிவான செயல் திட்டத்தை தயாரிக்க மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்தின் நிபுணர் ஆலோசகரை நியமிப்பதற்க்குத் தேவையான பரிந்துரையை வழங்குமாறு நீர் வளத்துறை உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். உரிய அனுமதி கிடைத்தவுடன் ஆறு மாசுபடுவதைத் தடுப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை உடனடியாக சமர்ப்பிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆக தாமிரபரணி சுத்தப்படுத்த பணி விரைவில் நடைபெறும் நம்பிக்கை பிறந்துள்ளது. பாராளுமன்றத்தில் தாமிரபரணியை காக்க தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராபர்ட் புருஸ் எம்.பி அவர்களை நெல்லையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து மனுதாரர் முத்தாலங்குறிச்சி காமராசு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அவருடன் தாமிரபரணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பொருநை மைந்தன், தென்னக இரயில்வே ஆலேசனைக்குழு உறுப்பினரும் தாமிரபரணி சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்க சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் ம.சு. சுதர்சன், தாமிரபரணி ஆர்வலர் மருத்துவர் டேனியல், நாட்டார்குளம் எஸ்.கே திருப்பதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ் அவர்களிடம் கேட்டபோது, தாமிரபரணி சுத்தப்படுத்துவதற்காக நான் டெல்லியில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். மதுரை உயர்நீதி மன்றத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொடுத்த வழக்கில் ஆஜராகி விவரத்தினை நீதியரசர்களிடம் தெரிவித்து வருகிறேன். விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து தாமிரபரணிக்கான வரைவு திட்டத்தினை விரைவாக கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education


New Shape Tailors



Thoothukudi Business Directory