» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.261 கோடி: நிர்வாக இயக்குநர் பேட்டி
திங்கள் 24, ஜூலை 2023 4:12:45 PM (IST)
2023-24 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் ரூ.261 கோடியாக உள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருடங்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
வங்கியானது 536 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர இலாபம் ரூ.261 கோடியாக உள்ளது.
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன், வங்கியின் 2023-24 முதல் காலாண்டு தணிக்கை செய்யப்படாத முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். பின்னர் அவர் கூறும்போது, "2023-24 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் வங்கியனது தனது மொத்த வணித்தில் 940% வளர்ச்சியடைந்து ரூ.84,300 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகை ரூ.47,008 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது.
கடன்களின் மொத்தத்தொகை ரூ.37,292 கோடி என்ற நிலையில் உள்ளது. நிகரமதிப்பு (Net-worth) ரூ.7,190 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய ஆண்டின் முதலாம் காலாண்டில் ரூ.5.427 கோடி). பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.381 கோடியிலிருந்து ரூ.454 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர இலாபம் ரூ.261 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டில் இதே முதலாம் காலாண்டில் ரூ.234 கோடியாக இருந்தது). கடன்களின் மூலம் வட்டி வருவாய் ரூ.1002 கோடியிலிருந்து ரூ.1156 கோடியாக உயர்வடைந்துள்ளது.
இதர வருவாய் ரூ.140 கோடியிலிருந்து ரூ.167 கோடியாக உயர்வடைந்துள்ளது. RAM (சில்லரை, விவசாயம், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள்) கடன் தொகை 88 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயந்த்துள்ளது. மொத்த வராக்கடன் 1.69%லிருந்து 1.56% ஆக குறைவடைந்துள்ளது. நிகர வராக்கடன் 0.93% லிருந்து 0.66% ஆக குறைவடைந்துள்ளது.
கடன் வழங்கல் துறை வங்கியானது விவசாயம், சிறு குறு தொழில் கடன், வியாபாரக்கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2023-24 முதலாம் காலாண்டில் முன்னுரிமைத் துறைகளுக்கு (Priority Sector) வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.24,839 கோடியில் இருந்து ரூ.27,805 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 12% ஆகும்.
முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40% என்ற இலக்கை விட அதிகமாக 75% என்ற விகிதத்தில் உள்ளது.விவசாயத் துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.12,231 கோடியாக உள்ளது. விவசாயத் துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு மொத்த கடன்களில் 18% சதவிகிதம் மட்டுமே ஆகும். இத்துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 32.80% கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. MSME துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.12,588 கோடியில் இருந்து ரூ.13,311 கோடியாக உயர்ந்துள்ளது.
V.o-y செயல்திறன் (Q1FY24 viz-a-viz Q1F23): வைப்புத்தொகை ரூ.43,233 கோடியில் ரூ.47,008 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் தொகை ரூ.37,292 கோடியாக உயர்ந்துள்ளது. இது 10.26% வளர்ச்சியை எட்டியுள்ளது. செயல்பாட்டு இலாபம் (Operating Profit) ரூ.379.90 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டில் இதே முதலாம் காலாண்டின் முடிவில் ரூ.374.40 கோடியாக இருந்தது.) நிகர இலாபம் ரூ261.23 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டில் இதே முதலாம் காலாண்டில் ரூ.234.21 கோடியாக இருந்தது.) இது 11.54% வளர்ச்சியடைந்துள்ளது.
ROA - 1.85% மற்றும் ROE -14.80 % (முந்தைய ஆண்டின் முதலாம் காலாண்டில் 1.83% மற்றும் 17.41%) நிகரமதிப்பு (Networth) ரூ.7,190 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய ஆண்டின் முதலாம் காலாண்டில் ரூ.5,427 கோடி) இது ரூ.1,763 கோடி உயர்ந்து 32.49% வளர்ச்சி அடைந்துள்ளது. மொத்த வராக்கடன் மொத்த கடன்களின் தொகையில் 1.56% ஆகவும், நிகர வராக்கடன் 0.66 % ஆக உள்ளது. (முந்தைய ஆண்டின் முதலாம் காலாண்டில் 1.69% மற்றும் 0.93%) PCR (Provision Coverage Ratio) 90.49% ஆக உள்ளது. (முந்தைய ஆண்டின் முதலாம் காலாண்டில் 88.08%).
புதிய முயற்சிகள்: இந்த காலாண்டில் 6 புதிய கிளைகள் துவக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் MSME சந்தை வணிகத்தை ஈர்க்க, MSME கடன் செயலாக்க மையம் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியில் துவக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியாண்டில் 50 புதிய கிளைகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 6 கிளைகள் திறக்கப்பட்டுள்ளது. நகை கடன் வழங்குதலை Lend Perfect முறையை பின்பற்றி பட்டுவாடா நேரத்தை கணிசமாக குறைக்கபட்டுள்ளது" என்று தெரிவித்தார். பேட்டியின் போது, நிதி ஆலோசகர் பி.ஏ. கிருஷ்ணன், பொது மேலாளர்கள் சூரிய ராஜ், இன்பமணி, ரமேஷ், நாராயணன், ஜெயராமன், துணைப் பொது மேலாளர் அசோக் குமார், தலைமை மேலாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.