தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மாணவர்களுக்கான மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி NSS திட்ட அலுவலர் டாக்டர் D. நடராஜன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் S.A. சண்முகம் தலைமை வகித்துப் பேசியதாவது: "மாணவர்கள் தங்களது கல்வி வளர்ச்சிக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை மனநலத்திற்கும் அளிக்க வேண்டும். மனக்குறைகள் மற்றும் பிரச்சினைகள் ஏற்படும் போது, தயக்கமின்றி வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டு, தேவையான நேரங்களில் உரிய மனநல நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் மனநல மருத்துவத் துறை மூத்த உதவிப் பேராசிரியர் டாக்டர் L. ராம், கல்வி சார்ந்த அழுத்தம், உணர்வுநலம், நேர்மறைச் சிந்தனை மற்றும் மன அழுத்தத்தைத் திறம்படக் கையாளும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கமளித்தார்.
தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் சமூகப் பணியாளர் சுதாகர் பேசுகையில், "சவாலான சூழ்நிலைகளில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவதுடன், திறந்த மனதுடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உரிய வழிகாட்டுதலை நாட வேண்டும்" என எடுத்துரைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மன அழுத்தம் தொடர்பான கேள்விகளை எழுப்பி விளக்கங்களைப் பெற்றனர்.
சிறப்பாகப் பங்களித்த அழைப்பாளர்களுக்குக் கல்லூரி முதல்வர் கௌரவம் செய்தார். நிறைவாக, மாணவர்கள் உடல் நலத்துடன் மனநலத்திற்கும் சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுச் செய்தியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

