'ஃபிளை துபாய்' (Flydubai) பயணிகள் விமானத்தைக் கடத்தித் தரையில் மோதி வெடிக்கச் செய்ய முயன்ற துணை விமானியின் பின்னணியில் ஈரானுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி 174 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் 'ஃபிளை துபாய்' விமானம் புறப்பட்டது. இந்தியைச் சேர்ந்த முதன்மை விமானி ஸ்மித் மச்சார் (39) என்பவருடன் ஓமன் நாட்டைச் சேர்ந்த நபர் துணை விமானியாகப் பணியாற்றினார்.
விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானி அறையிலிருந்த கோடரியால் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைத் துணை விமானி கொடூரமாகத் தாக்கினார். படுகாயமடைந்த நிலையிலும் நிலைகுலையாமல் தீரத்துடன் போராடிய ஸ்மித் மச்சார், பயணிகள் உதவியுடன் துணை விமானியைக் கட்டுப்படுத்தி விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். இந்திய விமானியின் இந்தச் சாகசச் செயலுக்குப் பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம், கைது செய்யப்பட்டுள்ள துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பு உள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், "தற்போது காவலில் உள்ள துணை விமானியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. எனக்குக் கிடைத்த முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் 'ஆம்' என்று சொல்ல முடியும். இருப்பினும் இது குறித்து முழுமையாக அறிய விசாரணைகள் தொடர்கின்றன. இதில் ஈரானுக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், நிச்சயம் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்" எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.

