தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து முன்னணி சார்பில் தபசு மண்டபத்தில் 12 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினசரி சிறப்புப் பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இதுதவிர, மாநகரின் பல்வேறு இடங்களிலும் அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் 6-ஆம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் விநாயகருக்குக் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் 39 விநாயகர் சிலைகள் தாரை தப்பட்டை முழங்கத் தபசு மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.

vinayagarvoorvalam32.jpg

மேலும், வீடுகளில் வைத்துப் பூஜிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட சிறிய விநாயகர் சிலைகளைப் பெண் பக்தர்கள் கைகளில் ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். ஊர்வலத்திற்குத் தூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து முன்னணித் தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமை தாங்கினார். இந்து முன்னணி திருச்சி கோட்டத் தலைவர் கனகராஜ் சிறப்புரையாற்றினார்.

மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். தபசு மண்டபத்திலிருந்து புறப்பட்ட பேரணி தமிழ்ச்சாலை, கீழ ரதவீதி, பாலகிருஷ்ணா தியேட்டர் ரோடு, 1-ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, வாடித் தெரு, புதுத்தெரு மற்றும் திரேஸ்புரம் வழியாகச் சங்குமுகக் கடற்கரையை அடைந்தது.

அங்குப் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் கிரேன் மூலம் தூக்கப்பட்டு, விசைப்படகுகளில் ஏற்றப்பட்டு நடு கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி. சுனில் மற்றும் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

vinayagarvoorvalam4.jpg