தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள குமரன் நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி பொன்மணி (46). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
மாலை நேரத்தில் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுப் பீரோவில் இருந்த 2 கிராம் தங்கக் கம்மல்கள் மற்றும் ரூ.5,000 ரொக்கம் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இத்திருட்டுச் சம்பவம் குறித்து பொன்மணி அளித்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த ஞானதுரை (37) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு தூத்துக்குடி 2-வது ஜே.எம். நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், மாஜிஸ்திரேட் இலக்கியா நேற்று ஞானதுரைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

