தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் மற்றும் பட்டினமருதூர் கிராமங்களில் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் அறக்கட்டளை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF) இணைந்து ஒருங்கிணைந்த வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கீழவைப்பாரைச் சேர்ந்த 20 மீனவப் பெண்களுக்குக் கடந்த ஏப்ரல் மாதம் பூம்புகாரில் உள்ள ‘Fish for All Research and Training Centre’-இல் நவீன முறையில் உலர் மீன் (கருவாடு) தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பயிற்சி பெற்ற 20 பெண்களுக்கும் சுகாதாரமான முறையில் உலர் மீன் உற்பத்தி செய்து கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில், 20 சிறிய சூரிய ஒளி உலர் கருவிகள் (Mini Solar Dryers) செப்டம்பர் 10 அன்று வழங்கப்பட்டன.

அதே நாளில், பட்டினமருதூர் கிராமத்தில் மீன்பிடிச் சமூகத்தின் நீண்டநாள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ‘பல்நோக்கு சமூகக் கூடம்’ திறந்து வைக்கப்பட்டது. இமையம் மீன்பிடி வலை பழுதுபார்த்தல், உபகரணங்கள் பராமரிப்பு மற்றும் அறுவடைக்குப் பிந்தைய பணிகளுக்கான மையமாக இது செயல்படும்.

நிகழ்ச்சியில் டிஎம்பி அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி டாக்டர் எம். முத்தையா பேசுகையில், "சுயசார்பு கொண்ட வாழ்வாதார மாதிரியை உருவாக்குவதே எங்களது நோக்கம். பெண்கள் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மூலம் தொழில்முனைவோராக மாற வேண்டும். இக்கடலோரக் கிராமங்களின் வெற்றி, தமிழகத்தின் பிற கடலோரப் பகுதிகளுக்கும் ஒரு வழிகாட்டி மாதிரியாக அமையும்" என்று குறிப்பிட்டார்.

MSSRF பகுதி இயக்குநர் டாக்டர் எஸ். வேல்விழி பேசுகையில் "திறன் மேம்பாடு, சந்தை இணைப்பு, சமூக உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி கடலோரச் சமூகத்தின் நீண்டகால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரி ராமகிருஷ்ணன், டிஎம்பி அறக்கட்டளை நிர்வாகிகள் கே. அனந்த சுப்பிரமணியன், இசை மகாராஜன், MSSRF பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.