தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஏரல் காந்தி சிலை அருகில், வண்டிமலச்சி அம்மன் கோவில் தெரு, உமரிக்காடு, ஆலடியூரர் அகரம், கொற்கை, சிறுத்தொண்டநல்லூர் உள்பட 9 இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் நிறைவு நாளன்று காலையில் அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 விநாயகர் சிலைகளும் ஏரல் பேருந்து நிலையம் அருகே வாகனங்களில் கொண்டு வரப்பட்டு வரிசையாக அணிவகுத்து நிறுத்தப்பட்டன.
அங்கிருந்து காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. விநாயகர் சிலை ஊர்வலம் ஏரல் முதன்மைச் சந்தை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகப் பக்தர்கள் பக்தி கோஷ முழக்கங்களுடன் தாமிரபரணி ஆற்றைச் சென்றடைந்தது. ஆற்றுப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்ட சிலைகள் வாகனங்களில் இருந்து பத்திரமாக இறக்கப்பட்டுத் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

