குடும்பத் தகராறு காரணமாகத் தந்தையை வெட்டிக் கொலை செய்த கணவர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என்றும், சட்டக் கல்லூரி மாணவரான தம்பியின் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் படுகொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் வேலாயுத நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் பி.எம்.டி. மக்கள் தேசம் கட்சியின் நிர்வாகியாகவும், ஆட்டோ ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்தார். குடும்பத் தகராறு காரணமாக, கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி மதுரையைச் சேர்ந்த இவரது மருமகன் முருகன் தலைமையிலான 6 பேர் கொண்ட கும்பல் முனியசாமியைக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட முனியசாமியின் குடும்பத்தினர், பி.எம்.டி. மக்கள் தேசம் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்துச் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் வைஷ்ணவி அளித்த பேட்டி: "குடும்பத் தகராறு காரணமாக எனது கணவர் முருகன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் எனது தந்தையைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டது. சம்பவத்தன்று எனது தம்பி அருண்குமார் ராமநாதபுரம் சட்டக் கல்லூரிக்குச் சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். ஆனால், அவனையும் கொல்லாமல் விடமாட்டோம் என கொலைக் கும்பல் மிரட்டிச் சென்றுள்ளது.

தற்போது எனது கணவர் உட்பட 6 பேரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், சிறையில் இருக்கும் அவர்களால் எனது தம்பியின் உயிருக்குத் தொடர்ந்து ஆபத்து நிலவி வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் குற்றவாளிகள் மீது உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.