கைத்தறி, துணிநூல் மற்றம் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி இன்று (15.09.2026), தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம் மற்றும் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை, அரசு செயலாளர் ஆர்.லில்லி, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) சீ.சுரேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், "கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இந்தியாவின் மிகப்பெரிய தலைமை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமாக திகழ்ந்து வருகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளை “கோ-ஆப்டெக்ஸ்" என்ற வணிக முத்திரையுடன் 146 விற்பனை நிலையங்கள் மூலம் வணிகப்படுத்தும் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. பட்டு மற்றும் பருத்தி இரகங்களின் பாரம்பரிய மற்றும் நவீன சமகால வடிவமைப்புகளைக் கொண்டு சிறந்த கைத்தறி இரகங்களை வணிகப்படுத்தும் நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் விளங்கி வருகிறது.
கோ-ஆப்டெக்ஸின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் புதிய விற்பனை நிலையங்களைத் திறத்தல் மற்றும் விற்பனை நிலையங்களை நவீனப்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விற்பனை மேம்பாட்டு நடவடிக்கையாக இன்றையதினம் கோவில்பட்டி தெற்கு கடை வீதியில் ரூ.32.00 இலட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனை தொடங்கி வைக்கப்படுகிறது. புதியதாக திறக்கப்பட்ட கோவில்பட்டி விற்பனை நிலையத்திற்கு தீபாவளி விற்பனை குறியீடாக ரூ.40.00 இலட்சம் நிர்யணயிக்கப்பட்டுள்ளது.
விற்பனை செய்யப்படும் அனைத்து துணி இரகங்களுக்கும் 30% சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி உண்டு. இந்த புதிய விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை காலத்திற்கான புதிய வடிவமைப்புகளில் பட்டுச்சேலைகள், பருத்தி சேலைகள், பருத்திவேட்டிகள், படுக்கை விரிப்புகள் மற்றும் ஏராளமான இரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இளைய தலைமுறை வாடிக்கையாளர்களுக்குத் வடிவமைப்புகளில் அவர்களது தேவைகளை நிறைவேற்றும் வண்ணம், பாரம்பரிய பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் புதுமையான வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களுடன் பல மதிப்பு கூட்டப்பட்ட இரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பெருமளவில் கோ-ஆப்டெக்ஸ் துணி இரகங்களை வாங்கி பயன்பெறலாம் என அமைச்சர் ம.விஜய் பாலாஜி தெரிவித்தார்.
முன்னதாக, எட்டயபுரத்தில் உள்ள பாரதி கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகளை கைத்தறி, துணிநூல் மற்றம் கதர்த்துறை அமைச்சர் பார்வையிட்டார்.இந்நிகழ்வில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள், கோ-ஆப்டெக்ஸ், மண்டல மேலாளர், திருநெல்வேலி ராஜேஷ்குமார், பாரதி கூட்டுறவு நூற்பாலையின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நகர்மன்ற தலைவர் (பொறுப்பு) ரமேஷ், 20வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் விஜய குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

