கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 6-வது தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மாடசாமி (29). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான மகாலட்சுமி நகரைச் சேர்ந்த மணிகண்டன் (36) மற்றும் தனுஷ்கோடியாபுரம் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (37) ஆகியோருடன் காரில் சென்றுள்ளார். காரை மாடசாமி ஓட்டியுள்ளார்.
கார் புதுரோட்டில் இருந்து ராஜீவ் நகர் நோக்கிச் சென்றபோது, போதை தலைக்கேறிய நிலையில் மாடசாமி காரை தாறுமாறாக ஓட்டியுள்ளார். அப்போது சாலையின் இடதுபுறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மீது கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குப் பின்னரும் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த தனியார் நிறுவன உணவு டெலிவரி ஊழியரான ராஜீவ் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் (21) என்பவர் மீது கார் பலமாக மோதி நின்றது.
இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்த கிருஷ்ணனை மீட்டு பொதுமக்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தாறுமாறாக ஓடிய காரைப் பின்தொடர்ந்து வந்த பொதுமக்கள், காரை மடக்கிப் பிடித்து கோவில்பட்டி கிழக்குக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காரில் இருந்த மாடசாமி, மணிகண்டன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

