தூத்துக்குடி மாநகராட்சியில் 1 முதல் 20 வார்டுகளுக்கு உட்பட்ட மக்களுக்கான பகுதி சபா கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் 20 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதி குறைகளைத் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடியில் அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பெருமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் பக்கீள் ஓடையை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் மாநகரில் 4,000 சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், பூங்காக்கள் மற்றும் பெண்களுக்குத் தனிப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வறட்சி நிலவும் சூழலிலும் தாமிரபரணி நீர் விநியோகம் சீராக நடைபெற்று வருவதால், பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். முதற்கட்டமாக ஒரு வார்டைத் தேர்வு செய்து அனைத்துக் கட்டிடங்களிலும் சோலார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, இனி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் இரும்புக் கழிவுகள் என 4 வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதன் மூலமே கழிவுகளை எளிதாக மறுசுழற்சி செய்ய இயலும் என்றும், நகரில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தப் பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.