பழனி கோவில் நில விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதேபோன்று தூத்துக்குடி விமான நிலையம் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான 32.38 ஏக்கர் அரசு தரிசு நிலம் தனியார் பட்டாவாக மாற்றப்பட்ட விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் உள்ள சர்வே எண் 37 மற்றும் 136 ஆகிய நிலங்கள் பழைய வருவாய் ஆவணங்களில் ‘சர்க்கார் தரிசு’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட பதிவுகளின் போது இவை ‘ரயத்துப் புன்செய்’ என மாற்றப்பட்டுத் தனியாருக்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு நிலம் எந்த ஆவணத்தின் அடிப்படையில் தனியார் பட்டாவாக மாறியது, அதற்கு உத்தரவிட்ட அதிகாரி யார், மூல ஆவணங்கள் எங்கே எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த 09.07.2025 அன்று வருவாய் கோட்டாட்சியர் அளித்த அறிக்கையில், தவறான UDR பதிவுகளை ரத்து செய்துவிட்டு, பழைய பதிவுகளின் அடிப்படையில் அந்த நிலங்களை மீண்டும் ‘சர்க்கார் தரிசு’ நிலமாக மாற்றப் பரிந்துரை செய்தார்.

அதேவேளையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தூத்துக்குடி வட்டத்தில் UDR-க்கு பிறகு பஞ்சமி நிலங்கள் இல்லை எனக் கூறப்படும் நிலையில், பட்டாவிற்கு ஆதாரமாகக் காட்டப்படும் ‘DC.1/93, 29.11.1983’ என்ற அசல் கோப்பு மாயமாகி உள்ளதும் சர்ச்சையை அதிகரித்துள்ளது.

முன்னதாக, 12.03.2026 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) வெளியிட்ட உத்தரவில், இந்நில விவகாரம் குறித்துச் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசு நிலத்தைக் காப்பாற்றப் பொதுமக்கள் ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பின.

இதனைத் தொடர்ந்து, அடிப்படை வருவாய் பதிவுகள் குறித்து நிர்வாக ரீதியான மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், மனுதாரர்களான தமிழ்நாடு லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஜெபஸ்டின் அற்புதராஜ் மற்றும் முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா ஆகியோர் ஆட்சியர் முன் ஆஜராகினர்.

அவர்கள் சார்பில் A-Register, SLR, UDR பதிவுகள், பத்திரப் பதிவுகள், வில்லங்கச் சான்று (EC), RTI ஆவணங்கள் மற்றும் தற்போது அந்த நிலங்களில் கட்டிடங்கள் எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

விமான நிலையத்தின் மிக அருகில் அமைந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து என்பதால், முறைகேடாக வழங்கப்பட்ட தனியார் பட்டாக்களை உடனடியாக ரத்து செய்து, ‘சர்க்கார் தரிசு’ நிலத்தை அரசு முழுமையாக மீட்க வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.