வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று தொடங்கப்படவுள்ள 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று தொடங்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் தோராயமாக 3,000 பயனாளிகள் (குழந்தைகள்) வரை பயன்பெற உள்ளனர். இத்திட்டத்தின் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
திட்டம் தொடங்கப்படும் செப்டம்பர் 15 அன்று, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, குடும்ப நலத்துறை மற்றும் ஊரக நலப்பணிகள் இணைந்து 150 பயனாளிகளுக்குத் தங்க மோதிரங்களை வழங்கவுள்ளன.
கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் முன்பதிவு முறையில் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. ஒரு நாளைக்கு 100 பயனாளிகள் வீதம், குழந்தைகள் பிறந்த அந்தந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ அல்லது அரசு மருத்துவமனைகளிலோ மோதிரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் தொய்வின்றி நடைபெற, தங்க மோதிரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான சேமிப்பு அறைகள் அவற்றின் தயார் நிலை மற்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குழு உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசித்தார்.
இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. பிரியதர்ஷினி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. எபனேசர் ஜோயல் குமார், தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் மரு. யாழினி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

