இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை பொறுப்பற்ற தன்மையோடு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதி அரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் தனது விரிவான விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதில், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 17 காவல்துறையினர், அன்றைய மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் மீது துறைவாரியான நடவடிக்கையும், குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்த வேண்டும் என ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், தற்போது உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துகள் கொலைக்குக் காரணமான அதிகாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தமிழ்நாடு அரசு தனது முந்தைய நிலைப்பாட்டை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். 13 பேர் கொலைக்குக் காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்று பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

