தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாள்தோறும் நிலம், மனை மற்றும் சொத்துக்களை வாங்குதல், விற்றல் போன்ற பல்வேறு பணிகளுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், முதியவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் இங்கேயே மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில், அலுவலகத்தில் உள்ள பெரும்பாலான மின்விசிறிகள் பழுது அடைந்து இயங்காமல் காட்சிப் பொருளாக மட்டுமே தொங்குகின்றன. போதிய காற்றோட்ட வசதி மற்றும் குடிநீர் வசதியும் இல்லாமல், சுட்டெரிக்கும் வெயிலில் முதியவர்களும் குழந்தைகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கை வசதியும் போதுமானதாக இல்லை எனப் புகார் எழுந்துள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டப் பதிவாளர் உடனடியாக தலையிட்டு, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பழுதடைந்துள்ள மின்விசிறிகளைச் சீரமைத்து இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அமர்வதற்குப் போதிய இருக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

