தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் காவல் எல்லைக்குட்பட்ட வேப்பலோடை கிராமத்தில் உள்ள 0.33 ஏக்கர் நிலமானது கிராம சமுதாய சங்கத்தின் அனுபவத்தில் இருந்து வந்தது. இந்நிலையில், வேப்பலோடை வடக்கு தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் செல்வம் (60) என்பவர், சமுதாய சங்கத்தின் போலியான லெட்டர் பேட் ஒன்றை சட்டவிரோதமாகத் தயார் செய்துள்ளார்.
அதைப் பயன்படுத்தி, அந்த நிலத்திற்குத் தனது தந்தையின் பெயரையும் இணைத்துக் கூட்டுப் பட்டாவாக மாற்றியுள்ளார். இந்த ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணத் தயாரிப்பு குறித்து வேப்பலோடையைச் சேர்ந்த காசி (72) என்பவர் தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அப்போதைய தருவைகுளம் ஆய்வாளர் ராமலட்சுமி (தற்போது மதுரை சைபர் கிரைம்) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இவ்வழக்கு ஓட்டப்பிடாரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், செல்வம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், ஓட்டப்பிடாரம் குற்றவியல் நடுவர் தரணிதரன் மொத்தமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 16,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தார்.

