தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள அனவரதநல்லூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ராஜதுரை (43). கொத்தனாராகப் பணியாற்றி வந்த இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 1.00 மணியளவில் தெருக் குழாயில் இருந்து வரும் தண்ணீரை உறிஞ்சுவதற்காகத் தன் வீட்டிலுள்ள மின்சார மோட்டாரைப் பொருத்தியுள்ளார். அப்போது அவர் மோட்டாரை நகர்த்த முயன்றபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்துத் தகவலறிந்து வந்த முறப்பநாடு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ராஜதுரையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

