தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாடுகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வேளாண்மை இயக்குநருமான கே.வி. முரளிதரன், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் இன்று (11.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டப் பணிகளைப் பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர், மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். தொடர்ந்து, லூர்து அம்மாள்புரத்தில் இயங்கி வரும் பொதுச் சமையல் கூடத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர், பத்ரகாளியம்மன் தெரு எஸ்.எஸ். பிள்ளை சந்தை அருகில் பக்கிள் ஓடையில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள், செல்வநாயகபுரத்தில் மழைநீர் வடிகால் மற்றும் நிரந்தர மின் மோட்டார் அறையின் செயல்பாடுகள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகம் மற்றும் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களைப் பார்வையிட்ட பின், மாநகராட்சி கூட்டரங்கில் துறை அலுவலர்களுடன் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்ட முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளில் இத்திட்டத்திற்கான பாதுகாப்பு வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
வேளாண்மை மற்றும் நீர்நிலை ஆய்வுகள்:
திருச்செந்தூர் வட்டம், கந்தசாமிபுரத்தில் வேளாண்மைத் துறை சார்பில் நடைபெற்று வரும் 'டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு' பணிகளையும், திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட ஆவுடையார்குளம் மற்றும் அதன் உபரிநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எபனேசர் ஜோயல் குமார், நலப்பணிகள் இணை இயக்குநர் ப்ரியதர்ஷினி, சுகாதார அலுவலர்கள் யாழினி, வித்யா, வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

