தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில், துறைமுகப் பயனாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறன், பாதுகாப்பு மற்றும் தொழில் செய்வதை எளிதாக்குதல் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது. தற்போது துறைமுகத்திற்குச் சுமார் 5,000 டி.இ.யு கொள்ளளவு கொண்ட சரக்குப் பெட்டகக் கப்பல்கள் வந்து செல்லும் நிலையில், இதனை அதிகரித்துச் சுமார் 12,000 டி.இ.யு கொள்ளளவு கொண்ட பெரிய பிரதான கப்பல்களை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து இணைப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பெரிய கப்பல்களை ஈர்க்கும் வகையில் 'ஒருங்கிணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் 2026-28'-இன் கீழ் 90 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்படுவதாகத் துறைமுகத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற மூத்த துணைப் போக்குவரத்து மேலாளர் டி. ரமேஷ் பேசுகையில், துறைமுக இணைப்புச் சாலை அருகே 50,000 சதுர மீட்டர் பரப்பளவில் கூடுதல் லாரி நிறுத்துமிட முனையம் அமைக்கப்பட உள்ளதாகவும், 10.22 மில்லியன் டன் கையாளும் திறன் கொண்ட பலவகைச் சரக்குத் தளம் (Berth No. 10) அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அதிகரித்து வரும் சரக்குப் பெட்டகப் பரிசோதனைகளுக்காக கூடுதல் ஸ்கேனர் கருவிகளை நிறுவுதல், மாற்று மின்சார ஏற்பாடுகள் மற்றும் துறைமுகப் பயன்பாட்டிற்காக மின்சாரத்தால் இயங்கும் கனரக வாகனங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற முடிவுகளும் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் துறைமுகத் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் உட்பட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சுங்கத்துறைப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

