தூத்துக்குடி மடத்தூர், கல்லூரி நகர் பகுதியில் வசித்து வருபவர் மங்கேஷ் பாபு. இவரது வீட்டின் வளாகத்திற்குள் திடீரெனப் புகுந்த நல்ல பாம்பு ஒன்று, அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வெளியேறி, சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், சிறப்பு நிலை அலுவலர் இசக்கி ராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தவசி, ஜெயக்குமார், அஜித் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பைச் சாதுரியமாக மீட்டு, பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சாதுரியமாகச் செயல்பட்டுப் பாம்பை மீட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.