தூத்துக்குடி–திருநெல்வேலி வழித்தடத்தில் காலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்எஸ் முத்து வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் காலை 7 மணி முதல் 9 மணி வரை குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுவதால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக காலை நேரங்களில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி அதிகளவில் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படாததால், ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் உரிய நேரத்தில் தங்களது கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காலை 7 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தில் தூத்துக்குடி–திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து, குறிப்பிட்ட நேர இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநகர செயலாளர் எம்.எஸ். முத்து வலியுறுத்தியுள்ளார்.

