மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமான 'மகாகவி தினத்தை' முன்னிட்டு, எட்டையாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தை திருமணம் இல்லாத தமிழகத்தை உருவாக்கப் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் எட்டையாபுரம் பாரதியார் நினைவு மணிமண்டபத்தில் மகாகவி தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எட்டையாபுரம் தமிழ் பாப்டிஸ்ட் தொடக்கப்பள்ளி மற்றும் மாரியப்ப நாடார் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட 'இளம் பாரதிகள்' மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பாரதியாரின் பாடல்களைப் பாடிய மாணவர்கள், குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்திட உதவி எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து பயிற்சி அளிக்கவும்,குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி குழந்தை திருமணம் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடவும்,நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் பாடுபடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குக் கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்டச் சாலை பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் முத்துச்செல்வம், முதியோர் பிரிவுத் தலைவர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கச் செயலாளர் ரமேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் நிறைவில் பாரதி வேடமணிந்து வந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ரோட்டரி சங்க இணைச் செயலாளர் நடராஜன், பாரதி ஆய்வாளர் பொன். பரமானந்தம், வழக்கறிஞர் முத்துராமலிங்கம், தமிழ் பாப்டிஸ்ட் பள்ளித் தலைமையாசிரியர் சொர்ணலதா, மாரியப்ப நாடார் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை ஹெப்சிபாய் நன்றி கூறினார்.

