தூத்துக்குடியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுவன் மாயமான நிலையில், காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன், கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி முதல் திடீரெனக் காணாமல் போனார். படிப்பில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாகச் சிறுவன் விடுதியில் இருந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துச் சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

நான்கு நாட்களாகியும் சிறுவன் கண்டுபிடிக்கப்படாத சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் சிறுவனை விரைந்து மீட்கக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தென்பாகம் மற்றும் தெற்கு காவல் நிலையப் போலீசார் முடுக்கி விடப்பட்டனர். காவல்துறையினரின் தீவிரத் தேடுதல் வேட்டையின் காரணமாக, நேற்று (நவம்பர் 2) சிறுவன் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்துத் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "30.10.2026 அன்று ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியில் இருந்து காணாமல் போன 13 வயது சிறுவன் ஜீவா, காவல்துறையினரின் துரிதமான நடவடிக்கையின் காரணமாக 02.11.2026 அன்று பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனைப் பத்திரமாக மீட்ட தூத்துக்குடி காவல்துறையினருக்குப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.