தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் இன்று (நவம்பர் 3), தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், 656 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.06 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பேசியதாவது: "ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் அரசு விழாவில், மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகளைத் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரகப் பகுதி: 379 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.47.65 கோடி வங்கி கடன் இணைப்பு, ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.85 லட்சம் வங்கி பெருங்கடன், நகர்ப்புறப் பகுதி: 271 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.56 கோடி வங்கி கடன் இணைப்பு என மொாத்தம் 656 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.81.06 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கடனுதவியைப் பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களது தொழிலை மேலும் மேம்படுத்தி, வெற்றி கரமான தொழில் முனைவோராக முன்னேற வாழ்த்துகிறேன்." என்றார்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு தயாரிப்புப் பொருட்களை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் நேரில் பார்வையிட்டுப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குநர் உ.நாகராஜன், பயிற்சி உதவி ஆட்சியர் பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், உதவி திட்ட அலுவலர் முருகன் மற்றும் திரளான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

