தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, மை பாரத் மற்றும் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து, வ.உ.சி. கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 70 சார்பில் மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் திருவிழா – 2027 மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி 31.10.2026 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வ.உ.சி. கல்லூரி முதல்வர் சி. வீரபாகு தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மை பாரத் தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அலுவலர் மேனுவல் பெர்லி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளைஞர்களின் ஆளுமைத் திறன், தலைமைப் பண்பு, சமூகப் பொறுப்பு மற்றும் தேசத்தின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அ. வேலியப்பன் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

இத்திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 200 மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களின் கலைத்திறன், படைப்பாற்றல் மற்றும் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் குழு நாட்டுப்புற நடனம், குழு நாட்டுப்புறப் பாடல், வீதி நாடகம், ஓவியப் போட்டி கவிதை எழுதுதல் ஐந்து முக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் மாணவர்கள் தங்களது தனித்துவமான கலைத்திறனையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தி நடுவர்களின் பாராட்டுகளைப் பெற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், வரும் டிசம்பர் 2026-இல் நடைபெறவுள்ள மாநில அளவிலான இளைஞர் திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர். மாநில அளவில் சிறப்பாகச் செயல்பட்டு தேர்வு பெறும் மாணவர்கள், 2027 ஜனவரி மாதம் புதுதில்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான இளைஞர் திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதன் மூலம் மாவட்ட மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் சிறப்பான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

இளைஞர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதுடன், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான தலைமைத்துவப் பண்புகளை உருவாக்குவதும், கலை மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியை வ.உ.சி. கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 70 திட்ட அலுவலரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான எஸ். செல்வம் ஒருங்கிணைத்துச் சிறப்பாக நடத்தினார். இந்நிகழ்ச்சி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், தேசிய நாட்டு நலப்பணித் திட்டத்தின் மண்டல இயக்குநரகம், தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவு, மை பாரத் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்றது.

இளைஞர்களின் ஆற்றல், கலைத்திறன் மற்றும் தலைமைத்துவத்தை ஒருங்கிணைக்கும் இத்திருவிழா, தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களிடையே புதிய உத்வேகத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.