தவெக அரசு சிறு ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்ததாரர்களின் மதுரை மண்டல சங்கக் கூட்டம், தூத்துக்குடி டி.எஸ்.எஃப் கிராண்ட் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. மண்டலத் தலைவர் கருப்பசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "கடந்த 16.10.2026 அன்று முதன்மைத் தலைமைப் பொறியாளர் செந்தில் அவர்களால் ஒப்பந்ததாரர்களை வஞ்சிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒப்பந்ததாரர்களின் வகுப்புகளை நான்காகக் குறைத்து, முதல் வகுப்பிற்கு ரூ.1.50 கோடி 'வங்கி உத்தரவாதம்' (Bank Guarantee) செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சிறு ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் வகையில் அமைந்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்ததும் புதுயுகம் பிறக்கும் என நம்பினோம். ஆனால், ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் 6,000 உள்ளூர் ஒப்பந்ததாரர்களைப் புறக்கணித்துவிட்டு, எல் அண்ட் டி போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.18,000 கோடிக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
லஞ்சமற்ற ஆட்சி எனக் கூறிக்கொண்டு தவெக அரசு இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறது. தமிழகம் முழுவதும் 4,000 ஒப்பந்ததாரர்கள், 40,000 குடும்பங்கள் மற்றும் 4 லட்சம் பணியாளர்களின் வாழ்வாதாரம் இத்துறையை நம்பியே உள்ளது.
தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள ஒப்பந்தப் பணிகளுக்கான நிதியை விரைவாக அரசு நிலுவையின்றி வழங்க வேண்டும். சிறு ஒப்பந்ததாரர்களைப் பாதிக்கும் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், வாழ்வாதாரத்தைக் காக்க மாநில அளவில் மிகப்பெரிய போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரித்தார்.

