கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 52 நாட்களே உள்ள நிலையில், தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற 400 கிலோ எடை கொண்ட 'ரிச் பிளம் கேக்' தயாரிப்பதற்கான உலர் பழங்கள் பதப்படுத்தும் பணி இன்று கோலாகலமாகத் தொடங்கியது. கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும்.

இப் பண்டிகையின் போது கேக்குகளை வாங்கி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசாக வழங்குவது வழக்கம். இந்நிலையில், தூத்துக்குடி வி.ஓ.சி. சாலையில் உள்ள டி.எஸ்.எஃப் கிராண்ட் பிளாசா ஹோட்டலில், கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக கேக் மிக்ஸிங் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கும் 'ரிச் பிளம் கேக்' தயாரிப்பதற்காக உலர் திராட்சை, முந்திரி, பாதாம், வால்நட், செர்ரி பழம், அத்திப்பழம், லெமன் ரின்ட்ஸ், டூட்டி ஃபுரூட்டி, ஆரஞ்சு பீல், ஆப்ரிகாட் என சுமார் 90 கிலோ எடையுள்ள உயர்தர உலர் பழங்கள், பழரசங்கள், தேன் மற்றும் உயர்தர மதுபானங்கள் சேர்க்கப்பட்டுப் பதப்படுத்தப்பட்டன.

ஹோட்டல் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கேக் தயாரிக்கும் கைதேர்ந்த கலைஞர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பிகளை அணிந்துகொண்டு, உற்சாகக் குரல் எழுப்பியபடி உலர் பழங்களை ஒன்று திரட்டி ஊறவைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு தயார் செய்யப்பட்ட கலவை சுமார் 40 நாட்கள் வரை சிறப்புப் பீப்பாய்களில் ஊறவைக்கப்படும். பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பாக, சுவையான 400 கிலோ எடை கொண்ட 'ரிச் பிளம் கேக்'-காகச் சுடப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படும்.

இது குறித்து டி.எஸ்.எஃப் கிராண்ட் பிளாசா மேனேஜிங் டைரக்டர் சந்திரா தெரிவிக்கையில்: "சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் ஊட்டச்சத்து மிக்க உயர்தரப் பொருட்களைச் சேர்த்து இக்கேக் தயாரிக்கப்படுகிறது.

கடந்த 18 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இச்சேவையை வழங்கி வருகிறோம். கடந்த 2025-ஆம் ஆண்டு 300 கிலோ கேக் தயாரிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் பேராதரவு காரணமாக இந்த ஆண்டு 400 கிலோ கேக் தயாரிக்க திட்டமிட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன," எனக் குறிப்பிட்டார்.