தூத்துக்குடி மை பாரத் கேந்திரா சார்பில் 'வளர்ந்த இந்தியா இளைஞர் பாராளுமன்றம்' என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் 19 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு மேலோங்கும், மக்களின் வரிப்பணம் எவ்வாறு சேமிக்கப்படும், மற்றும் இத்தேர்தல் சீர்திருத்தம் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை எவ்வாறு விரைவுபடுத்தும் என்பன குறித்துத் தங்கள் கருத்துக்களை மாணவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான் என்றும், அதை மீண்டும் கொண்டு வருவது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வெற்றியாளர்கள், அடுத்து நடைபெறும் மாநில அளவிலான பேச்சுப்போட்டிக்குத் தகுதி பெறுவர்.

மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெறுபவர், வரும் ஜனவரி 16-ஆம் தேதி தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு புதுடெல்லி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியில், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் நேரில் உரையாற்றும் பொன்னான வாய்ப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உரையாற்றுவதற்கான இந்த வாய்ப்பு தங்களுக்குப் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாகப் போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.