தூத்துக்குடி அருகே உள்ள சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த விசிக பிரமுகர் பாலமுருகன் (எ) பாலா (வயது 43), கடந்த நவம்பர் 1-ஆம் தேதி காலை அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்துத் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, ஏற்கனவே பொன்பாண்டி (எ) பார் ரவி (44), சிவச்சந்திரன் (22), சிவக்குமார் (22), கோகுல்நாத் (24), மணிகண்டன் (20) ஆகிய 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாதா நகரைச் சேர்ந்த ரமேஷ்கண்ணன் (23) என்பவரைப் போலீசார் நேற்று (நவம்பர் 2) கைது செய்தனர். இதன் மூலம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பாலமுருகன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம், அரசு வேலை மற்றும் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் கூடுதல் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, உடலைப் பெற்றுக்கொண்டு நேற்று மாலை அடக்கம் செய்தனர்.

தொடர்ந்து, விசிகவினர் மற்றும் பாலமுருகனின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், "பாலமுருகன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குடும்பத்தினருக்குத் தகுந்த பாதுகாப்பு அளிப்பதோடு, கொலையில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.