தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இரு நாட்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

தமிழை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் 27.12.1956 அன்று தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை விரைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்த, 2026-27ஆம் நிதியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் பயிலரங்கம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து கூட்டரங்கில் வரும் நவம்பர் 17 மற்றும் 18 (17.11.2026, 18.11.2026) ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை இப்பயிலரங்கம் நடைபெறவுள்ளது.

இப்பயிலரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் மற்றும் தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.

பயிலரங்கில் கலந்துகொள்பவர்களுக்கு அலுவலகக் குறிப்புகள், வரைவுகள் மற்றும் செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழிச் செயலாக்கம் மற்றும் அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வு மற்றும் குறைகலைவு நடவடிக்கைகள் ஆகிய தலைப்புகளில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன:

இப்பயிலரங்கு மற்றும் கருத்தரங்கில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு அலுவலகத்திலிருந்தும் அலுவலர் நிலையில் ஒருவரும் (அலுவலர் அல்லது கண்காணிப்பாளர்), பணியாளர் நிலையில் ஒருவரும் (உதவியாளர், இளநிலை உதவியாளர் அல்லது தட்டச்சர்) என மொத்தம் இருவர் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.