தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (02.11.2026) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் இதர கோரிக்கைகள் அடங்கிய 425 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும், மூத்த குடிமக்களிடமிருந்து 25 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று பெறப்பட்ட 23 மனுக்களும் என மொத்தம் 473 மனுக்கள் பெறப்பட்டன.
தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி ஆட்சியர் கௌரவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பிர்தௌஸ் பாத்திமா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி உட்பட அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

