தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மகன் மது குடித்துவிட்டு வந்த ஆத்திரத்தில் தாய் தின்னரை ஊற்றித் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே சூசைபாண்டியாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிலுவை மைக்கேல். இவரது மனைவி மைக்கேல் இமாமகுலேட் (வயது 51). சிலுவை மைக்கேல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவர்களுக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

மகன்கள் தங்களது சித்தப்பா ஜேசு ராஜேந்திரன் வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மது அருந்தாமல் இருந்த மகன் அஜித் (25), நேற்று மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மனவேதனையும் ஆத்திரமும் அடைந்த மைக்கேல் இமாமகுலேட், மகனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து இரவு 11.45 மணியளவில் வீட்டில் இருந்த தின்னரை எடுத்துக்கொண்டு, வீட்டின் அருகே உள்ள பாத்ரூமுக்குள் சென்று கதவை உட்புறமாகத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். பின்னர் தனது உடலில் தின்னரை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு இதனைக் கவனித்த மகன் அஜித், அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து கதவை உடைத்துப் பார்த்தபோது, மைக்கேல் இமாமகுலேட் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.