தூத்துக்குடியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வந்த 8-ஆம் வகுப்பு மாணவன் விடுதியிலிருந்து மாயமான சம்பவம் குறித்து, மாணவனின் தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரெகுராமபுரத்தைச் சேர்ந்தவர் கே. வெள்ளச்சாமி. இவரது மகன் ஜீவா (வயது 13). இவர் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கடந்த 3 ஆண்டுகளாகத் தங்கி, காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி விடுமுறை முடிந்து விடுதிக்குச் சென்ற ஜீவா, அதன்பின் பள்ளிக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அக்டோபர் 27-ஆம் தேதி பள்ளி ஆசிரியர் தெரிவித்ததைத் தொடர்ந்து, பெற்றோர் மாணவனுக்கு அறிவுரை கூறிப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த 30.10.2026 அன்று மாலை 4.26 மணியளவில் விடுதியிலிருந்த தனது உடமைகளை எடுத்துக்கொண்டு மாணவன் ஜீவா வெளியேறியது விடுதியின் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்பின்னர் அவன் விடுதிக்கும் செல்லாமலும், வீட்டிற்கும் வராமலும் மாயமாகியுள்ளான்.

வெள்ளை நிறச் சட்டை, ஊதா நிறப் பேன்ட் அணிந்து பள்ளிப் பை மற்றும் மஞ்சப்பை உடன் சென்ற மாணவன் ஜீவா எங்கு சென்றான் என்பது தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இது தொடர்பாகக் கடந்த 30.10.2026 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தந்தை வெள்ளச்சாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்து, மாயமான தனது மகனைக் விரைந்து கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.