தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர், தனது வாழ்வாதாரத்திற்காகக் கோழிப்பண்ணை அமைத்து நடத்தி வருகிறார். இக்கோழிப்பண்ணைக்கு மின் இணைப்பு கோரி கடந்த 3 ஆண்டுகளாகப் பலமுறை மனு அளித்தும், மின்வாரியம் சார்பில் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த வாலிபர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவர் தனது பையில் பாட்டிலில் பெட்ரோல் மற்றும் தீப்பெட்டியுடன் வந்ததைக் கண்ட நுழைவாயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரைத் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் அவரிடமிருந்த பெட்ரோல் பாட்டில் மற்றும் தீப்பெட்டிகளைப் பறிமுதல் செய்த போலீசார், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாதவாறு தடுத்தனர். பின்னர், இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்த போலீசார், அவரைப் பாதுகாப்புடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.