தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பின் தொண்டர்கள் பங்கேற்ற சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925-ஆம் ஆண்டு நாகபூரில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் தொடங்கப்பட்டு, தற்போது 100 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து, விஜயதசமி மற்றும் நிறுவன தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோயில் அருகே சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நேற்று தொடங்கியது. இந்நிகழ்வை டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தின் நிறைவாகச் சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தொழிலதிபர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கவுடிய மடாதிபதி பூஜ்ய ஸ்ரீ பக்த லட்சண கிரி மகராஜ் சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார். திரேஸ்புரம் ஊர்த் தலைவர் சந்தான செல்வம் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கணபதி சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
சாத்தான்குளத்தில் ஊர்வலம்:
இதேபோன்று, மேலசாத்தான்குளம் முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் சன்னதி தெருவைச் சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் முருகன், நாராயணன், விஸ்வநாதன் மற்றும் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

