தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள வீடுகள், ஓட்டல்கள், கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் மூலம் 4 வகையான திடக்கழிவுகள் (மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள்) தினமும் வீடு வீடாக சென்று பெறப்படுகிறது.

அவ்வாறு பெறப்படும் குப்பைகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் செயலாக்க மையம் மற்றும் வள ஆதார மீட்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு செயலாக்கம் செய்யப்படுகிறது.

மக்காத குப்பைகளான பல்வேறு பிளாஸ்டிக் நெகிழி பொருட்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பேலிங் செய்யப்பட்டு, லாரிகள் மூலம் சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 20 டன் பிளாஸ்டிக் நெகிழி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மக்கும் குப்பைகள் நுண் உரமாக்கல் மையங்களில் அரைத்து, தொட்டிகளில் மக்கச் செய்து, நுண் உரமாக மாற்றப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் 825 டன் நுண் உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 111 டன் நுண் உரம் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நுண் உரம் பெற விரும்பினால், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள செழிப்பு உரம் அங்காடியை அணுகலாம் அல்லது 18002030401 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கி மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.