தேனி சிறையில் கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்தின் எதிரொலியாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இயங்கி வந்த பழமையான கிளை சிறைச்சாலை எவ்வித முன் அறிவிப்புமின்றி திடீரென மூடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து கடந்த 26-ஆம் தேதி 17 கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். காட்டுப்பகுதிகளில் பதுங்கியிருந்த அவர்கள் அனைவரும் பின்னர்க் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இதேபோன்று சென்னை புழல் சிறையிலிருந்தும் 2 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தமிழக அளவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதுடன், தப்பிச் செல்லும் கைதிகளைச் சுட்டுப்பிடிக்கவும் அரசு உத்தரவிட்டது. மேலும், பாதுகாப்புப் பலவீனமாக உள்ள பழமையான கிளை சிறைகளை மூடி, கைதிகளை மாவட்ட சிறைகளுக்கு மாற்றவும் சிறைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் இயங்கி வந்த கிளை சிறையில் 100 கைதிகள் வரை அடைக்கும் வசதி இருந்தது. ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படும் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டு வந்தனர்.

தற்போது பாதுகாப்புப் பலப்படுத்துதல் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இக்கிளை சிறையை மூடச் சிறைத்துறை உத்தரவிட்டது. இதனையொட்டி, நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஸ்ரீவைகுண்டம் கிளை சிறை மூடப்பட்டு, அதன் நுழைவு வாயிலுக்குப் பூட்டு போடப்பட்டது.

இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த 25 விசாரணைக் கைதிகளும் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு, தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி மாவட்டச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

ஏற்கெனவே பேரூரணி சிறையில் கைதிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், தற்போது ஸ்ரீவைகுண்டம் கைதிகளும் அங்கு மாற்றப்பட்டுள்ளதால் பேரூரணி மாவட்டச் சிறை வளாகத்தில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆங்கிலேயர் காலம் முதல் இயங்கி வந்த கிளை சிறை திடீரென மூடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.