தூத்துக்குடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் இருந்த நபர் ஒருவரது வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 மது பாட்டில்களைப் போலீசார் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் வெங்கடேஷ் (29). இவர் அப்பகுதியில் பார் நடத்தி வருகிறார். இவர் மீது தென்பாகம் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட மதுவிலக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பும் வீட்டில் 1,000 மது பாட்டில்களைப் பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுப் பிணையில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக வெங்கடேஷ் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், தென்பாகம் காவல்துறை சார்பில் அவருக்குச் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், லெவிஞ்சிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாகத் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்குள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கள்ளச்சந்தை விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 740 குவாட்டர் பாட்டில்கள், பீர் பாட்டில்கள் என மொத்தம் சுமார் 900 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்கள் தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

விசாரணையில், இந்த பதுக்கலில் ஈடுபட்டது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் இருந்த பார் உரிமையாளர் வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. ஆரம்பத்தில் அவரைக் கைது செய்ய உள்ளூர் போலீசார் தயக்கம் காட்டிய நிலையில், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. மற்றும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து வெங்கடேஷ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். மேலும், அவருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பும் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பில் இருந்துகொண்டே இவ்வளவு பெரிய அளவில் மது பாட்டில்களைப் பதுக்கிய சம்பவம், அவருக்குப் பாதுகாப்பில் இருந்த காவலர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி. தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தூத்துக்குடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.